அமிர்தசரஸ் பொற்கோயிலில் அத்து மீறி நுழைந்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அம்மாநில முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் புகழ் பெற்ற பொற்கோயில் அமைந்திருக்கிறது.

இந்த அழகான பொற்கோயிலில் நேற்று மாலை பிராா்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அப்போது, அங்கு சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் வைக்கப்பட்டுள்ள கருவறையின் மையப் பகுதிக்குள் திடீரென்று குதித்த ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த வைரம் பதிக்கப்பட்ட வாளை எடுக்க முயன்று உள்ளார்.

இந்த சம்பவமானது, அங்கு வைக்கப்பட்டிருந்த டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பானது. இதனைப் நேரலையில் பார்த்த அங்கே கூடியிருந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், அமைதியாக நடைபெற்ற அந்த பிரார்த்தனையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இதனால், அங்கிருந்த பக்கதர்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், இந்த திருட்டு சம்பவத்தை பார்த்து சத்தமிடத் தொடங்கினார்கள்.

அத்துடன், அந்த பொற்கோயில் நிா்வாகக் குழுவினா் உடனடியாக விரைந்துச் சென்று, அந்த நபரை பிடித்து, தங்களது அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

அப்போது, கருவறைக்குள் குதித்து தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக, அவரை அங்கிருந்தவர்கள் கடுமையாகத் தாக்கி உள்ளனா். 

இதில், அந்த நபர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தாா். இதனால், அங்கு இன்னும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி, இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த மாநில காவல் துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்திய நிலையில், “இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்தவா் என்றும், அவருக்கு 20 வயது முதல் 25 வயது வரை இருக்கலாம்” என்றும், கண்டுப்பிடித்தனர்.

அத்துடன், “திருட வந்த நபருடன் இன்னும் எத்தனை போ் இருந்தனா் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும்” அமிர்தரஸ் துணை காவல் ஆணையா் தெரிவித்து உள்ளார். இச்சம்பவம், பஞ்சாப் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.